உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று ஐதராபாத் வருகை

ஐதராபாத்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் (50ஓவர்) தொடர் இந்தியாவில் வரும் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பையில் பங்கேற்க ஆப்கானிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்ட நிலையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வருகிறது. லாகூரில் இருந்து துபாய் புறப்பட்ட பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து இன்று ஐதராபாத் வருகின்றனர்.

நாளை மறுநாள் முதல் பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அன்று நியூசிலாந்துடன் பயிற்சி போட்டியில் ஆட உள்ளது. இதனிடையே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் லாகூரில் நேற்று அளித்த பேட்டியின் போது, ஒரு அணியாக எங்களது மனவலிமை உயர்ந்த நிலையில் இருக்கிறது. நம்பிக்கையுடன் உள்ளோம். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். களத்தில் சாதிக்க எங்களுக்காக பிரார்த்திக்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடியதில்லை. மற்ற ஆசிய நாடுகளில் உள்ளது போன்று தான் இந்தியாவில் சீதோஷ்ண நிலை இருப்பதாக அறிகிறோம். அதற்கு ஏற்ப தயாராவோம். உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வழிநடத்த இருப்பது கவுரவமாகும். முதலில் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்பது சிறிய இலக்குதான். சாம்பியனாக தாயகம் திரும்ப வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதை நிறைவேற்றுவோம் என்று நம்புகிறேன், என்றார்.

The post உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று ஐதராபாத் வருகை appeared first on Dinakaran.

Related Stories: