ஆசிய விளையாட்டு: ஆடவருக்கான பாய்மர படகுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் விஷ்ணு சரவணன்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான பாய்மர படகுப் போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய வீரர், வீராங்கனைகள் மிகவும் எதிர்பார்த்த போட்டியில் பதக்கங்களை கைவிடாமல் அறுவடை செய்து வருகின்றனர். ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு, மகளிர் கிரிக்கெட், குதிரை ஏற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியா தங்கத்தை கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் குழு பிரிவு மற்றும் 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன் துப்பாக்கி சுடுதலிலும் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான பாய்மர படகுப்போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார். 34 புள்ளிகளைப் பெற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணன் வேலூரில் மாவட்டத்தில் பிறந்தவர். ஆசிய விளையாட்டில் பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவிற்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதேபோல், ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 50 மீட்டர் ஸ்கீட் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. வீர் சிங் அங்கத், குர்ஜோத் சிங் கங்குரா, ஆனந்த் ஜீத் சிங் நருகா ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்றது. இதுவரையிலான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி உட்பட 18 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. தற்போது துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பாய்மர படகுப்போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளதால் பதக்க எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

The post ஆசிய விளையாட்டு: ஆடவருக்கான பாய்மர படகுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் விஷ்ணு சரவணன்..!! appeared first on Dinakaran.

Related Stories: