திருவாரூர், செப். 27: அரசு கலைக்கல்லூரி மகளிர் விடுதியில் பெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் எம் எல் ஏ செல்வப் பெருந்தகை (பெரும்புதூர்) தலைமையிலான சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது வீட்டின் தரம் மற்றும் பயனாளிகளுக்கு அரசின் தொகை கிடைக்கப்பெற்றதா என்பது குறித்து கேட்டறிந்தனர்.
குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தபோது, மருத்துவ சேவை உரிய முறையில் கிடைக்கிறதா? கர்ப்பிணி பெண்களிடம் சமுதாய வளைகாப்பு நடைபெற்றதா? என்று கேட்டறிந்தனர். சுகாதார நிலையத்தில் உரிய முறையில் மின்விசிறி இல்லாததை பார்த்த குழுவினர், உடனே மின்விசிறி அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். பின்னர் வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துகிறார்களா? என்று கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் திருவாரூர் வேளாண்மை விரிவாக்கம் மையம், விதை பரிசோதனை ஆய்வகம், அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவி விடுதி ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு, பின்னர் தஞ்சை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆய்வின் போது கலெக்டர் சாரு, குழு உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி (போளூர்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி, துரை சந்திரசேகரன் (திருவையாறு) சேகர் (பரமத்தி வேலூர்), பாலாஜி (திருப்போரூர்), மதியழகன் (பர்கூர்), மற்றும் அரசு சார்பு செயலாளர் பால சீனிவாசன், இணை செயலாளர் தேன்மொழி,திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், எஸ்பி சுரேஷ் குமார், டிஆர்ஓ சண்முகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஆர்டிஓக்கள் சங்கீதா, கீர்த்தனா மணி கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் அழைப்பு அரசு கலைக்கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் மாணவிகளிடம் குறை கேட்டனர் appeared first on Dinakaran.