பெரம்பலூர் அருகே லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள்

பெரம்பலூர்,செப்.27: லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 3 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எம்எல்ஏ பிரபாகரன் குத்து விளக்கேற்றிப் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று(26ம்தேதி) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 புதிய வகுப்பறைக் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் அங்கமுத்து தலைமையில்,
பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பள்ளி மாணவ,மாணவியருக்கு இனிப்புகளை வழங்கி, புதிய வகுப்பறைகளைப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டேன்லி செல்வக்குமார், அறிவழகன், லாடபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் சாவித்திரி பெருமாள், ஒன்றியக்கவுன்சிலர் ராஜேந்திரன், பெரம்பலூர் வட்டாரக் கல்வி அலுவலர் அருண்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி ரஞ்சனா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவித் தலைமை ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

The post பெரம்பலூர் அருகே லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: