சிறுவாச்சூரில் விலை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.9: சிறுவாச்சூரில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி வழங்ககோரி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பால் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி 45 ரூபாயாக வழங்க வேண்டும், அரசு வழங்கும் ஊக்கத் தொகை 3 ரூபாயை 10 ரூபாயாக உயர்த்திக் கொடுத்திட வேண்டும்,

நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை உடனே வழங்கிட வேண்டும், 50 சதவீத மானிய விலையில் மாட்டுக் கொட்டகை, மாட்டுத் தீவனம், தீவனம் வெட்டும் மிஷின், பால் கறக்கும் மிஷின் வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரம்மதேசம், அனுக்கூர் சிறுவாச்சூர் ஆகிய இடங்களில் கறவை மாடுகளுடன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு பாலு உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமதுஅலி, மாநில துணை தலைவர் செல்லதுரைஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள், பலரும் கறவை மாடுகளோடு கலந்து கொண்டனர்.

 

Related Stories: