தமிழ்நாடு அரசு வெளியிட்ட சென்னை பல்கலை. தேடுதல்குழுவை திரும்ப பெற வேண்டும்: கவர்னர் மாளிகை உத்தரவால் மீண்டும் மோதல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட சென்னை பல்கலைக்கழக தேடுதல்குழு திரும்ப பெற வேண்டும் என்று கவர்னர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த செப்டம்பர் 6ம் தேதி உத்தரவிட்டார். அதில் முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதியை சேர்த்திருந்தார். தமிழ்நாட்டில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். மூன்று பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதனால், ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியது. அதில், யு.ஜி.சி பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், ஆளுநர் துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து உத்தரவிட்டார். அதில், முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல் குழுவின் விவரங்களை அரசிதழில் தமிழக அரசு அதிரடியாக வெளியிட்டது. அதில், குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆளுநர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, உறுப்பினர்களாக பல்கலை. சிண்டிகேட் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.ஆளுநர் முன்பு வெளியிட்ட தேடல் குழு அறிவிப்பில் 4வது உறுப்பினராக இடம் பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரின் பெயர் இதில் நீக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த தேடுதல் குழு திரும்ப பெற வேண்டும் எனஆளுநர் இப்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னைப் பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்ய கவர்னரால் செப்டம்பர் 6ம் தேதி தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை மற்றும் விளம்பரங்கள் உரிய முறையில் பத்திரிகைகளில் ெகாடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேடுதல் குழுவை அறிவித்து கடந்த 13ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் யூசிஜி உறுப்பினர் சேர்க்கப்படவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி துணைவேந்தர் தேடுதல் குழுவில் யூசிஜி உறுப்பினர் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதி.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் அனுமதி இல்லாமல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு இதுபோன்ற அறிவிக்கை வெளியிட அதிகாரம் இல்லை. இதை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது மீண்டும் தமிழக அரசுக்கு எதிராக மோதல் போக்கை தொடங்கியுள்ளார்.

The post தமிழ்நாடு அரசு வெளியிட்ட சென்னை பல்கலை. தேடுதல்குழுவை திரும்ப பெற வேண்டும்: கவர்னர் மாளிகை உத்தரவால் மீண்டும் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: