பெரம்பலூர்,செப்.26: ‘‘வேப்பூர்-ஓலைப்பாடி சுடு காட்டில் புதிதாக வெட்டப்பட்ட குடிநீர் கிணற்றை பரிசோதிக்காமல் மக்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்,’’ என்று அப்பகுதி கிராமப் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வேப்பூர் – ஓலைப்பாடி (மேற்கு), வடக்குத் தெருவை சேர்ந்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட கிராம பொது மக்கள் பலரும் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
வேப்பூர் ஆதிதிராவிடர் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் ஒரே சுடுகாட்டில் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் உள்ளது. அந்த இடத்தில் தற்பொழுது புதிதாக மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அந்தக் கிணற்றில் பொது மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் சென்று கலக்கிறது.
அத்தகைய கிணற்றுநீரை குறிப்பிட்ட ஆதிதிராவிட சமூகத்தினர் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்துகிறது. அந்த நீரை பரிசோதனை இன்றி பயன்படுத்த அச்சமாக உள்ளது. ஏற்கனவே அதன் அருகே உள்ள கைக்குழாய் பம்புகளில் வரும் குடிநீரை பயன்படுத்தியதால் பலர் தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொண்டு கிணற்று குடிநீர்த் திட்டத்தைக் தடை செய்ய வேண்டும்.
வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவிகள் குடிப்பதற்கு போதுமான குடிநீர் வசதி கல்லூரி வளாகத்தில் இல்லாததால் மாணவிகள் கல்லூரிக்கு வெளியே சென்று தண்ணீர் குடிக்கும் அவல நிலை உள்ளது. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு தரமான உணவு, சுத்தமான குடிநீரை வழங்கி அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக வேப்பூர் பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். வேப்பூரில் உள்ள சுடு காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மின்விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post புதிதாக வெட்டிய குடிநீர் கிணறு பரிசோதிக்காமல் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் appeared first on Dinakaran.
