ஆண்டிபட்டி, செப். 26: தேனி என்.ஆர்.டி.நகரில் செயல்படும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தொழிற்சங்க கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார், புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கொடியேற்றினார். பின்னர் நடைபெற்ற மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் கூறுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 25,000 களப்பணியாளர்கள் உள்பட, 56000 பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும், இதில் கேங்மேன் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 5000 பேரை உடனடியாக பணியமர்த்த வேண்டும். அதே போல் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். இந்நிகழ்வில் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் உமாதேவி உள்பட மின்சார ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post மின்வாரிய தொழிற்சங்க கட்டிட திறப்பு விழா appeared first on Dinakaran.