ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்: துப்பாக்கிசுடுதல், கிரிக்கெட்டில் அசத்தல்

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில், இந்தியா நேற்று ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. ஆண்கள் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியா உலக சாதனையுடன் முதல் தங்கப் பதக்கத்தை நேற்று கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த பைனலில் அபாரமாக செயல்பட்ட டீனேஜ் உலக சாம்பியன் ருத்ராக்‌ஷ் பாட்டீல், ஒலிம்பியன் திவ்யான்ஷ் பன்வார், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் அடங்கிய அணி, ஒட்டுமொத்தமாக 1893.7 புள்ளிகள் குவித்து சீன அணியின் முந்தைய உலக சாதனையை முறியடித்ததுடன் முதலிடம் பிடித்து நடப்பு தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது.

மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் நேற்று மோதிய இந்தியா 19 ரன் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாகக் களமிறங்கிய ஆசிய விளையாட்டு போட்டித் தொடரிலேயே தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு சாதனை படைத்தது. இது நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கப் பதக்கமாக அமைந்தது. துப்பாக்கிசுடுதல் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் நேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்திய இந்திய அணியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ X வலைத்தள பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த 2 தங்கப் பதக்கங்களால், இந்தியா பதக்க பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்: துப்பாக்கிசுடுதல், கிரிக்கெட்டில் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: