பாஜகவுடன் குமாரசாமி கூட்டணி வைத்ததால் மதசார்பற்ற ஜனதா தளம் 2 ஆக உடைகிறது? செயல் தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி முறைப்படி இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர்கள் விலகி வருகின்றனர். கர்நாடகாவில் முக்கிய கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம், கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி மற்றும் தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பொறுத்தவரை கர்நாடகா மாநிலத்தில் தான் செல்வாக்கு பெற்று விளங்குகிறது.

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது மதசார்பற்ற தளமும், பாஜகவும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைத்ததற்கு, அக்கட்சியின் சிறுபான்மை தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைமை எடுத்துள்ள இந்த முடிவு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அக்கட்சியின் செயல் தலைவர் என்.எம்.நபி தலைமையிலான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர் நூர் அகமது, மூத்த நிர்வாகிகள் மொஹித் அல்தாப், நசீர் உஸ்தாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சின் ​​சிறுபான்மை பிரிவு கட்சி தொண்டர்களை மாவட்டம் தோறும் சந்திப்பது என்றும், பெங்களூருவில் நடக்கும் மற்றொரு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. சிறுபான்மை பிரிவை சேர்ந்த பல தலைவர்கள் மட்டுமின்றி மாநில துணைத் தலைவர் சையது ஷைபுல்லா உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதனால் அடுத்த சில நாட்களில் கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்படுவதா? தனித்து செயல்படுவதா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்’ என்றனர்.

The post பாஜகவுடன் குமாரசாமி கூட்டணி வைத்ததால் மதசார்பற்ற ஜனதா தளம் 2 ஆக உடைகிறது? செயல் தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: