*2வது முறை நிதி ஒதுக்கியும் பயனில்லை
திருவாரூர் : தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் வரை 9 ஆண்டாக ஆமை வேகத்தி்ல் நடக்கும் ஒன்றிய அரசின் இருவழிச்சாலை பணி எப்போது முடியும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் தஞ்சை வரையில் 4 வழி சாலை பணியானது ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே சாலை பணி தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் வரையில் சுமார் 80 கி.மீ தூரத்திற்கு 4 வழி சாலையாக அமைக்கும் பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது.
ஆரம்ப கட்டத்தில் 4 வழி என்று அறிவிக்கப்பட்ட போதிலும், நிதியை காரணம் கூறி 2 வழி சாலையாக மாற்றப்பட்டது. இதற்கான ஒப்பந்த பணியை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஒன்று ரூ.365 கோடிக்கு டெண்டர் எடுத்தது.அதன்படி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் இதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ளது. ஆனால் உரிய காலத்தில் பணியை துவங்கவில்லை.
இதனால் ஜி.எஸ்.டியால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையாட்கள் கூலி உயர்வு ஆகியவை காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அந்த தனியார் நிறுவனமானது சாலை பணியை 50 சதவீதம் கூட முடிக்காமல் பாதியில் விட்டு சென்றது.இதற்கிடையே இந்த சாலை விரிவாக்க பணிக்காக, கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஒன்றிய அரசு 2ம் கட்டமாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் காரணமாக தற்போது மீண்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரையில் இந்த பணி எப்போது முடியும் என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகள் பல்வேறு இடங்களில் இடைஇடையே சுமார் 4 அடி, 5 அடி உயரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் எவ்வித முன்னச்செரிக்கை இல்லாமலும், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாமலும் உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த சாலை பணியை காரணம் காட்டி ஏற்கனவே இருந்து வரும் சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக மாறியது. பல்வேறு போராட்டங்களுக்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நெடுங்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பெரும் முயற்சியின் காரணமாக ரூ.114 கோடி மதிப்பில் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் விஞ்ஞான ரீதியாக பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும் இந்த இரு வழி சாலை பணி மட்டும் 9 ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வரை ஒன்றிய அரசின் இருவழிச்சாலை பணி தாமதம் appeared first on Dinakaran.
