திண்டிவனம் அருகே ரயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

 

திண்டிவனம், செப். 25: திண்டிவனம் அருகே காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மரம் முறிந்து விழுந்தது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.  புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் ரயில் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அதிகாலை 3.20 மணியளவில் ஒலக்கூர் அருகே ரயில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பெரிய மரம் ஒன்று முறிந்து ரயில் மீது விழுந்தது. சத்தம் கேட்ட ரயில் டிரைவர், ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள், ரயில் மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழையின் காரணமாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்கள் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த வழியாக செல்லும் சென்னை சென்ற பாண்டியன், மன்னை, நெல்லை, அனந்தபுரி, சேது, முத்து நகர் விரைவு ரயில்கள் விழுப்புரம், திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டன. ரயில் மேல் விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டு, காலை 5 மணியளவில் ரயில் புறப்பட்டு சென்றதை தொடர்ந்து மற்ற ரயில்களும் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post திண்டிவனம் அருகே ரயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: