வடமதுரை ஊராட்சியில் புதர் மண்டிகிடக்கும் துணை சுகாதார நிலையம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை,செப். 25: வடமதுரை ஊராட்சியில் பழுதடைந்து, புதர்கள் மண்டிக்கிடக்கும் பழைய துணை சுகாதார நிலையத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி பேட்டைமேடு கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நோயாளிகளை பரிசோதித்து ஊசி போடும் அறை, பெண்கள் பிரசவத்திற்கு சிகிச்சை பெறும் அறை என இரண்டு அறைகள் உள்ளது. இங்கு வடமதுரை, பேட்டைமேடு, பெரியகாலனி, சின்னகாலனி, ஏரிகுப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில் இங்குள்ள பிரசவ அறையின் ஓடுகள் உடைந்து, பெரிய ஓட்டை விழுந்து காணப்பட்டது. அதுமட்டுல்லாமல் கட்டிடதை சுற்றி முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள், பாம்புகள் உள்ளே வருகிறது. இதனால் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பெண்களும், பணிபுரியும் ஊழியர்களும் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். இதனால் கடந்த சில வருடங்களாக, இந்த துணை சுகாதார நிலையம் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை அகற்றி, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு செவிலியர்கள் மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள். டாக்டர்கள் வருவது இல்லை. டாக்டர் இல்லாததால் நாய் கடித்தாலோ அல்லது யாராவது விஷம் குடித்தாலோ அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க பெரியபாளையத்தில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழைய சுகாதார நிலையத்தை அகற்றிவிட்டு புதிய சுகாதார நிலைய கட்டிடம் கட்டி டாக்டரை நியமிக்க வேண்டும் என கூறினர்.

The post வடமதுரை ஊராட்சியில் புதர் மண்டிகிடக்கும் துணை சுகாதார நிலையம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: