பேருந்து நிழற்குடை பணியின்போது மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது: மணலி புதுநகரில் பரபரப்பு

 

திருவொற்றியூர், செப்.25: மணலி புதுநகர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியின் போது மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுநகர், 80 அடி சாலையில் மழைநீர் கால்வாய் பணி கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. அப்போது திருவள்ளுவர் சிலை எதிரில் இருந்த மாநகர பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் அந்த நிழற்குடையை ஏற்கனவே இருந்த இடத்திற்கு பதிலாக சற்று தள்ளி மற்றொரு இடத்தில் வைத்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஏற்கனவே இருந்த இடத்திலேயே நிழற்குடையை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நிழற்குடையை தூக்கி, தரையில் பொருத்தும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது பொக்லைன் இயந்திரம் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து அங்கு நிழற்குடையை பிடித்துக்கொண்டு இருந்த மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் நாகராஜ் (30), கிருஷ்ணன் (28), தினேஷ் (34), சேகர் (28) ஆகிய 4 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் பாய்ந்ததும் உடனடியாக மின்சார கம்பியில் உரசிய பொக்லைன் இயந்திரத்தை கீழே இறக்கியதால் அதிர்ஷ்டவசமாக நான்கு தொழிலாளர்களும் உயிர் தப்பி உள்ளனர். இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேருந்து நிழற்குடை பணியின்போது மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது: மணலி புதுநகரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: