மகளிர் கிரிக்கெட் பைனலில் இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வதை உறுதி செய்தது. முதல் அரையிறுதியில் வங்கதேசத்துடன் நேற்று மோதிய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஸெஜியாங் தொழில்நுட்ப பல்கலை. மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 17.5 ஓவரில் 51 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 12 ரன் எடுத்து ரன் அவுட்டாக, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். தொடக்க வீராங்கனைகள் ஷாதி ராணி, ஷமிமா சுல்தானா இருவரும் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகினர். வங்கதேச இன்னிங்சில் மொத்தம் 5 பேர் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சில் பூஜா வஸ்த்ராகர் 4, டைட்டஸ் சாது, அமன்ஜோத் கவுர், ராஜேஷ்வரி கெயக்வாட், தேவிகா வைத்யா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கேப்டன் மந்தனா 7, ஷபாலி வர்மா 17 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20, கனிகா அஹுஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2வது அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 75 ரன். இலங்கை 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன். ஹாங்சோவில் இன்று காலை 11.30க்கு தொடங்கும் பைனலில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

The post மகளிர் கிரிக்கெட் பைனலில் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: