ஆசிய விளையாட்டு போட்டி; பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா: படகு போட்டி, துப்பாக்கிசுடுதலில் அசத்தல்

ஹாங்சோ: சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில், இந்தியா நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை வென்று பதக்க வேட்டையை அமர்க்களமாகத் தொடங்கியது. படகு போட்டியின் ஆண்கள் ‘காக்ஸ்டு 8’ பிரிவு பைனலில் நீரஜ், நரேஷ் கல்வானியா, நீதிஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5 நிமிடம், 43.01 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டது. இந்த போட்டியில் இந்தியாவை விட 2.84 விநாடிகள் முந்திச் சென்று முதலிடம் பிடித்த சீனா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

ஆண்கள் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் சீனா முதலிடம் பிடித்து (6:23.16) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்ற நிலையில், இந்தியா 2வது இடமும் (6:28.18), உஸ்பெகிஸ்தான் 3வது இடமும் பிடித்தன (6:33.42). படகு போட்டியில் ஆண்கள் ஜோடி பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர்கள் லெக் ராம், பாபு லால் யாதவ் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனர். படகு போட்டியில் மட்டும் நேற்று இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால், ஆஷி சோக்‌சி ஆகியோரடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886.0 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை முத்தமிட்டது. இந்த போட்டியில் சீனா புதிய ஆசிய சாதனையுடன் (1,896.6) தங்கப் பதக்கம் பெற்றது. மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனையும் ஜூனியர் உலக சாம்பியனுமான ரமிதா ஜிண்டால் (230.1) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். படகு போட்டியில் 3 பதக்கம், துப்பாக்கிசுடுதலில் 2 பதக்கம் என நேற்று 5 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளது.

* ஆண்கள் கால்பந்து போட்டியில் மியான்மருடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்தியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
* ஆண்கள் டேபிள் டென்னிஸ் குழு காலிறுதியில் தென் கொரியாவுடன் மோதிய இந்தியா 0-3 என்ற கணக்கில் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தது.
* மகளிர் 50 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திரம் நிக்கத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வியட்னாம் வீராங்கனை தி டம் குயனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
* மகளிர் 54 கிலோ எடை பிரிவு பாக்சிங்கில் இந்தியாவின் பிரீத்தி பவார் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
* மகளிர் வாள்வீச்சு காலிறுதியில் இந்தியாவின் தனிக்‌ஷா கத்ரி 7-15 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் விவியன் காங்கிடம் போராடி தோற்று பதக்க வாய்ப்பை நழுவவிட்டார்.
* மகளிர் கால்பந்து போட்டியில் தாய்லாந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்ற இந்தியா நாக்-அவுட் சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது.
* மகளிர் ரக்பி செவன்ஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான் 45-0 என்ற கணக்கில் இந்தியாவை எளிதாக வீழ்த்தியது.

The post ஆசிய விளையாட்டு போட்டி; பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா: படகு போட்டி, துப்பாக்கிசுடுதலில் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: