ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்; அரையிறுதியில் வங்கதேசத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி: பதக்கம் உறுதி

ஹாங்சோ :2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதியில், வங்கதேச அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி ஆகி உள்ளது. இந்த டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே வங்கதேச அணியின் துவக்க ஜோடியை இந்திய அணியின் பூஜா வஸ்திரகர் தனது அபார பந்துவீச்சால் டக் அவுட் ஆக்கி அனுப்பினார். அடுத்து வந்த வீராங்கனைகளில் நிகர் சுல்தானா மட்டுமே 12 ரன் எடுத்து இரட்டை இலக்கத்தை எட்டினார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். பூஜா வஸ்திரகர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

டிடாஸ் சாது, அமன்ஜோத் கவுர், ராஜேஸ்வரி கெயிக்வாட், தேவிகா வைத்யா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி இரண்டு ரன் அவுட் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வங்கதேச அணி வெறும் 51 ரன்களுக்கு சுருண்டது. ஆறு வைடுகளை இந்தியா வீசியதால் வங்கதேசம் 50 ரன்களை தாண்டியது. இல்லையென்றால் அந்த அணி இன்னும் பரிதாப நிலைக்கு சென்று இருக்கும். இதையடுத்து ஆடிய இந்திய அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 52 ரன்களை எட்டியது. ஸ்மிருதி மந்தனா 7, ஷபாலி வர்மா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரீகஸ் 20, கனிகா அஹுஜா 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் அணி, இலங்கையை 50 ரன்களுக்குள் சுருட்டி இருந்தது. தற்போது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வங்கதேச அணியை 51 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்குள் நுழைந்து தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை இந்தியா அணி உறுதி செய்துள்ளது.

The post ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்; அரையிறுதியில் வங்கதேசத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி: பதக்கம் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: