எலுமிச்சை ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம்: ஆரணியில் பரபரப்பு

 

பெரியபாளையம், செப். 24: எலுமிச்சை ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரணி தமிழ் காலனியை சேர்ந்தவர்கள் சரளா (36), ஜீவ தரணி (21), கவுதம் (19) மற்றும் பள்ளி மாணவர்கள் பிரித்திகா (13), கவுசிகா (7), லோகேஷ் குமார் (13), எஸ்வந்தி (11), சுஜன் (9), நிவேதா (9), நிஷாந்தி (10), ருத்ரன் (9), தாரிகா (13), ஹரீஷ் (15). இவர்கள் விடுமுறை தினமான நேற்று தங்களது வீட்டின் அருகே இருந்த மரத்திலிருந்து எலுமிச்சை பழங்களை பறித்து ஜூஸ் தயாரித்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்த ஒருவரது வீட்டில் இருந்து ஐஸ்கட்டி பாக்கெட்டை ஜூஸில் கலந்து அனைவரும் குடித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஐஸ்கட்டி பாக்கெட்டை பார்த்தபோது அது ஒத்தடம் கொடுக்க பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், தவறுதலான ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்த சிறுவர்கள், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனடியாக, அவர்களுக்கு ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எலுமிச்சை ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேருக்கு வாந்தி, மயக்கம்: ஆரணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: