சென்னையை பொறுத்தவரை தனி வீடுகள் என்பது வருங்காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் பார்க்கும் நிலை ஏற்படும். அந்த அளவுக்கு தனி வீடுகள் எல்லாம் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகிறது. இப்படி பெருகி வரும் மக்கள் தொகையால் இட நெருக்கடி மட்டுமல்ல போக்குவரத்து நெருக்கடி என்ற பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான் துணைக்கோள் நகரங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான், சென்னை புறநகர் பகுதியான மாமல்லபுரம் செயற்கைக்கோள் துணை நகரம் அமைக்க கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியில் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனிடையே மீண்டும் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அன்று முதல் சென்னையை அழகுபடுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 என்ற திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச தரத்தில் சென்னையை மாற்ற இந்த திட்டங்கள் வகுக்குப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சென்னை அருகே ₹300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா , அதேபோன்று துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு ₹1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் சென்னையை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், சென்னையில் நிலவும் மக்கள் நெருக்கடியை கருத்தில் கொண்டு மாமல்புரம் செயற்கை கோள் துணை நகரத்தை தமிழ்நாடு அரசு தற்போது கையிலெடுத்துள்ளது. இதற்கிடையே, நகரின் பிரதான பகுதிக்கு வெளியில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏவின் இரண்டாவது முழுமை திட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்டது. அதை பரிசீலித்து தமிழ்நாடு அரசு, ‘மாமல்லபுரம் அருகில் புதிய துணை நகரம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது, துணை நகரங்கள் அமைப்பது தொடர்பான பணிகளை, சிஎம்டிஏ முடுக்கி விட்டுள்ளது. இங்கு புதிய துணை நகரம் அமைய உள்ள பகுதி, அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ₹2 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆய்வு பணிகளை அதிகாரிகள் நடத்தினர். இதையடுத்து, பெரும் பொருட் செலவில் சென்னையின் புதிய அடையாளமாகவும், சென்னையின் புதிய துணை நகரமாகவும் மாமல்லபுரத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 25 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது.
இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது. அதாவது, சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும். அதேபோன்று புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான், தற்போது இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக, புதிய செயற்கைக்கோள் துணை நகரத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 25 கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்போரூர் தாலுகாவில் அடங்கிய வளவந்தாங்கல், நெம்மேலி, கிருஷ்ணன்காரணை, பட்டிபுலம், திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி, சிறுதாவூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், காரணை, பஞ்சந்தீர்த்தி, அதிகமநல்லூர், தட்சிணாவர்த்தி, ஆமூர், பொருந்த வாக்கம், சந்தனாம்பட்டு, ஆகிய கிராமங்களும், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் அடங்கிய பூஞ்சேரி, மாமல்லபுரம், கடம்பாடி, வட கடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றாள், பெருமாளேரி, கொக்கிலமேடு ஆகிய கிராமங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்த கிராமங்களில் தனியார் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசு சாலை, குடிநீர், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை செய்து தரும். தனியார் தங்கள் வசம் உள்ள நிலங்களில் மென்பொருள் பூங்கா, தனியார் தொழிற் நிறுவனங்கள் ஆகியவற்றை தொடங்க அனுமதி கோரினால், ஒற்றைச்சாளர முறையில் உடனடி அனுமதி வழங்கப்படும். இதன்மூலம் அவற்றில் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் இந்த நகரத்தில் செய்து தரப்படும். முதற்கட்டமாக இந்த கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், அனாதீனம் நிலங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. குறிப்பாக கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் மட்டும் சுமார் 400 ஏக்கர் அனாதீனம் நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு அரசு வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் பையனூர், ஆமூர், பஞ்சந்தீர்த்தி, குண்ணப்பட்டு ஆகிய கிராமங்களை ஒருங்கிணைத்து தனியார் நிறுவனம் சார்பில், ஜப்பான் சிட்டி என்ற தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பேட்டையில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் மட்டும் இடம் பெறும். அவர்களுக்கான குடியிருப்பு வசதியும் இதே தொழிற்பேட்டை வளாகத்தில் செய்யப்பட உள்ளது. மேலும், இந்த வளாகத்தில் ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்பேட்டை மற்றும் ஜப்பான் நகரத்தை இந்த துணைக்கோள் நகரத்துடன் இணைத்து மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளை இணைத்து பாலம் கட்டவும், நடுவில் உள்ள பக்கிங்காம் கால்வாயை சீரமைத்து வெளி நாடுகளில் உள்ளது போல் நீர் வழிப்போக்குவரத்து மற்றும் சாகச சுற்றுலா மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், மாமல்லபுரம் பிரமாண்டமான நகரமாக சர்வதேச தரத்தில் மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: மாமல்லபுரம் ஒரு நகர பகுதியாகும். ஏற்கனவே மகாபலிபுரம் உள்ளூர் திட்டமிடல் குழு என ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி வளர்ச்சிக்கான மாஸ்டர் பிளான் திட்டமும் உள்ளது. இவை இரண்டையும் துணைக்கோள் நகரங்களுக்குள் கொண்டு வர வேண்டும். மாமல்லபுரத்தை சுற்றி கிராமங்கள் அதிகம் உள்ளன. ஒரு விமானநிலையம் கொண்டு வருவது எளிதாகும், ஏனெனில் அங்கு நிலம் மட்டும் கையகப்படுத்தும் பணிகள் மட்டுமே இருக்கும். ஆனால் துணைக்கோள் நகரத்தை பொறுத்தவரை அதனை செயல்படுத்த எவ்வளவு பகுதிகள் கொண்டு வர வேண்டும், எத்தனை கிராமங்களை இணைப்பது தொடர்பான முழுமையான ஆலோசனை நடத்த வேண்டும். அவற்றை எல்லாம் நடத்தி ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே, இந்த திட்டத்தை வேகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது தமிழ்நாடு அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. துணைக் கோள் நகரத்தை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மாமல்லபுரத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
The post மாமல்லபுரம் துணைக்கோள் நகரம் அமைக்கும் திட்டத்தை வேகப்படுத்திய அரசு: தேர்வான 25 கிராமங்களின் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.
