திருப்பூர், செப்.23: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், பாக முகவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என எம்எல்ஏ செல்வராஜ் அறிவுறுத்தி உள்ளார். திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (24ம் தேதி) திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில் நடக்கிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய ஏழு மாவட்டங்களின் 50 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்காக, திருப்பூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 24ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். எனவே, திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
The post முதல்வர் நாளை திருப்பூர் வருகை திமுக பாக முகவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் appeared first on Dinakaran.