சென்னை: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி பங்கீடு விவகாரத்தில் ஒழுங்காற்று குழு மற்றும் நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை பிறப்பித்த உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சினையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர்; காவிரி நீர் திறப்பால் குறுவை சாகுபடியை காப்பாற்ற உதவும். எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அதில் ஓரளவுக்கு பங்கிட்டு தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த நீரை திறக்க கோரவில்லை; தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரைத்தான் திறந்துவிட கோருகிறோம். காவிரியில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா நீரை திறந்துவிட வேண்டியது கட்டாயம். தீர்ப்பை அமல்படுத்தாவிடில் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். சட்ட ரீதியாக சென்று கொண்டிருக்கும்போது பேச்சுவார்தை நடத்துவது சரியாக இருக்காது என்று கூறினார்.
The post உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்; காவிரி நீர் திறப்பால் குறுவை சாகுபடியை காப்பாற்ற உதவும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.