பள்ளி மாணவர்களுக்கு மேம்பாடு சிறப்பு பயிற்சி

தர்மபுரி, செப்.22: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை மொழி, கணித திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது. தர்மபுரி தொடக்கக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை மொழி மற்றும் கணித திறன் மேம்படுத்துவதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மான்விழி வரவேற்றார். பிரத்தம் கல்வி அறக்கட்டளை மாநிலத்தலைவர் ஷிவானி ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
தர்மபுரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் ஏரியூர் ஒன்றியங்களை சார்ந்த அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பை சேர்ந்த மாணவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் கணித திறன்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டமானது போதுமான அடிப்படை மொழி மற்றும் கணித திறன்களை அடையாத மாணவர்களை கண்டறிந்து, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, திறனை மேம்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 100 அரசு நடுநிலைப்பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம், பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, பயிற்சிக்காக பிரத்தம் கல்வி அறக்கட்டளை மூலம் சிறப்பு பயிற்றுநர்களுடன் கலந்தாலோசித்து பயிற்சி வடிவமைக்கப்பட்டது. இதன்படி 100 ஆசிரியர்களுக்கு, 3 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு 40 நாட்களுக்கு அடிப்படை வாசிப்பு மற்றும் கணித திறன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடக்க விழாவில், செந்தில் மெட்ரிக் பள்ளி சக்திவேல், விஜய் வித்யாலயா கல்வி குழும தலைவர் டி.சி. இளங்கோவன், ரோட்டரி மிட்டவுன் தலைவர் இளவரசன், நிர்வாகிகள் சதீஷ்குமார், ஜெகநாதன், கிருஷ்ணன், சங்கீதா, ரகுநாத் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு மேம்பாடு சிறப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: