கிருஷ்ணகிரி, செப்.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.பீலா ராஜேஷ் அறிவுறுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில், மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நிவாரண முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், முதல் பொறுப்பாளர்கள் விவரங்கள், உயர் மின் மோட்டார் பம்பு, டீசல் ஜெனரேட்டர், பொக்லைன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீராதாரங்களான ஏரி, குளங்கள் ஆகியவற்றின் கரைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கால்வாய்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர்வார வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் மூடி, எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவு கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கால்நடை நிவாரண மையங்கள் அமைத்து, கால்நடைகளுக்குத் தேவையான ஊசி மருந்துகள், தீவனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும், கழிவுநீர் கால்வாய்களின் வெள்ள நீர் தேங்காமல் வெளியேறவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள மரங்களின் கிளைகள், மின் கம்பிகள் மேல் படாதவாறு கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் உறுதியுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏதுவாக, அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக, சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஓசூர் பாகலூர் சாலை, கேசிசி நகரில் உள்ள திருப்பதி மஹால், சமத்துவபுரம் சமுதாய கூடம், சூளகிரி அடுத்த காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாம்களை அவர் பார்வையிட்டார். ஓசூர் ஒன்றியம், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சமைப்பதையும், மாணவர்களுக்கு வழங்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டார். அப்போது, மாணவர்களுக்கு உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும். சமையலறை மற்றும் மாணவர்கள் உணவு அருந்துமிடத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஒன்றியம், பையனப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கட்டிகானப்பள்ளியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், மின் விநியோக மையத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில், டிஆர்ஓ சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, கிருஷ்ணகிரி மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள் வேலு, பழனி, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் appeared first on Dinakaran.