பிளாஸ்டிக் தடை சட்டத்தை எதிர்த்த வழக்கு கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை பொதுமக்கள் விரும்பவில்லை: ஐகோர்ட்டில் ஆவின் பால் நிர்வாகம் அறிக்கை

சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் என்று கூறியதுடன், பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா என்று சர்வே (கணக்கெடுப்பு) நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினீத் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சென்னையில் வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, வடக்கு ஐகோர்ட் காலனி, குமாரசாமி நகர், திருநகர், சிட்கோ நகர் பகுதிகளில் நுகர்வோர்களிடம் ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவளிப்பீர்களா, பாட்டிலில் விற்க வேண்டுமா, பாலித்தீன் கவரில் விற்க வேண்டுமா என்று சர்வே செய்யப்பட்டது.

இந்த சர்வேயில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, குமாரசாமி நகர், திருநகர் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர், பாட்டிலில் பால் விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்கும் என்பதால், பாலித்தின் உறைகளிலேயே தொடர மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறப்பாக செயல்படுகிறது
பிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்த அறிக்கையில், “சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் மஞ்சப்பை முகாம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 229 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 13,33,126 சோதனைகள் நடத்தப்பட்டு ₹15.89 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 9.5 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டு ₹5.48 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பை விழிப்புணர்வு முகாம் மூலம் 3.5 லட்சம் துணி பைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 26 மாவட்டங்களில் 84 இடங்களில் மஞ்சப்பை விற்பனை மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 76 ஆயிரம் மஞ்சப்பைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக்குக்கு மாற்று ஏற்பாடு குறித்த புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செப்டம்பர் 10ம் தேதி மட்டும் 2138 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

The post பிளாஸ்டிக் தடை சட்டத்தை எதிர்த்த வழக்கு கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை பொதுமக்கள் விரும்பவில்லை: ஐகோர்ட்டில் ஆவின் பால் நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: