கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என ஐகோர்ட்டில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. விசாரணையின்போது, ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும்.

எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என்று ஆவின் நிறுவனத்துக்கு நீதிபதிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய முன்னதாக உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, ஆவின் நிர்வாக இயக்குநர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், சென்னை, கோவையில் 7 இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 5 இடங்களில் பாலை பாட்டிலுக்கு பதில் பிளாஸ்டிக் பாக்கெட்டாக வழங்கவேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது.

பாட்டில்களில் பால் விற்பனை செய்தால் விலை உயர்ந்துவிடும் என்பதால், பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்கப்படும் பால் தங்களுக்கு போதுமானது என்று தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில், இதனை ஆய்வு செய்து நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்றும் ஆவின் நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

The post கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: