இஸ்லாமிய வாழ்வியல்
“பாவங்கள் பெருகுவதற்குக் காரணமே மதங்கள்தாம். மதங்களை ஒழித்துவிட்டால் பாவங்களும் ஒழிந்துவிடும்” என்றார் நண்பர் ஒருவர். தூக்கிவாரிப்போட்டது எனக்கு. “பாவங்கள் பெருக மதங்கள் எப்படிக் காரணம் ஆகும்?” என்று கேட்டேன்.
“பின்ன என்னங்க? பாவ மன்னிப்பு எனும் கருத்தோட்டம் மதங்களில் இருப்பதால்தான் பாவங்கள் அதிகமாகின்றன. ஒவ்வொரு முறையும் பாவம் செய்துவிட்டுக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். மீண்டும் பாவத்தில் ஈடுபட இந்த மன்னிப்பே ஒரு லைசென்ஸ் மாதிரி ஆகிவிடுகிறது” என்று கோபத்தால் படபடத்தார்.
இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்புப் பற்றி அந்த நண்பர் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் படபடக்கிறார் என்று புரிந்தது. பாவ மன்னிப்புப் பற்றி இஸ்லாம் நான்கு வழிமுறைகளைக்
கூறுகிறது.
1) செய்த பாவம் குறித்து உண்மையிலேயே மனம் வருந்தி, இறைவனிடமே மன்னிப்புக் கோர வேண்டும்.
“உயர்ந்த பண்பினர் யார் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டால் உடனே அவர்கள் இறைவனை நினைத்துத் தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். இறைவனைத் தவிர பாவங்களை மன்னித்து அருள்பவன் வேறு யார்? மேலும், தாம் செய்தவற்றில் அறிந்துகொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்.” (குர்ஆன் 3:135)
2) மீண்டும் பாவம் செய்யக் கூடாது என்று உறுதிகொள்ள வேண்டும்.
“எவர்கள் அறியாமையின் காரணமாகத் தீய செயல்புரிந்தார்களோ பிறகு பாவமன்னிப்புக் கோரி தம் செயல்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களை இறைவன் மன்னித்தருள்வான். அவர்கள் மீது கருணை புரிவான்.” (குர்ஆன் 16:119)
3) பாவத்தை விட்டொழிப்பதுடன் நற்செயல்களில் ஈடுபடவும் வேண்டும்.
“எவர் பாவ மன்னிப்புக் கோரி மேலும் நற்செயலும் புரியத் தொடங்கிவிட்டிருக்கிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மைகளாக மாற்றிவிடுவான்.”
(குர்ஆன் 25:70)
4) தான் செய்த பாவத்தின் காரணமாக யாருக்கேனும் இழப்போ துன்பமோ ஏற்பட்டிருந்தால், அவருக்குரிய இழப்பீட்டைச் செலுத்திவிட வேண்டும். அப்படிச் செலுத்தாவிட்டால் பாவத்திற்கான தண்டனையிலிருந்து அவர் தப்ப முடியாது.
“அக்கிரமம் செய்தவர்கள் அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உரிய இழப்பீட்டைச் செலுத்தாதவரை இறைவன் அவர்களை (தண்டிக்காமல்) விடமாட்டான்.”- (நபிகள் நாயகம்(ஸல்), ஆதாரம்- பைஹகி.)
இஸ்லாத்தைப் பொறுத்தவரை பாவ மன்னிப்பு என்பது மீண்டும் பாவம் செய்வதற்கான லைசென்ஸ் அல்ல. இதை மேற்சொன்ன குர்ஆன், நபிமொழி ஆதாரங்களுடன் நண்பருக்கு விளக்கினேன். நண்பர் ஆழமாக யோசிக்கத் தொடங்கினார்.
– சிராஜுல் ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“அவர்கள் இறைவனின் பக்கம் மீண்டு அவனிடத்தில் பாவ மன்னிப்புக் கோரிட வேண்டாமா?” (குர்ஆன் 5:74)
The post பாவங்கள் பெருக மதம் காரணமா? appeared first on Dinakaran.