அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து மாற்றிவிடுங்கள்: பாஜக தலைமைக்கு அண்ணாமலை அறிக்கை; இரு தரப்பினரும் அமைதியாக இருக்க அமித்ஷா உத்தரவு

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கட்சித் தலைமைக்கு அண்ணாமலை அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதி காக்கும்படி அமித்ஷா கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் அடிக்கடி அதிமுகவும் பாஜகவும் மோதி வருகின்றன. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மோசமாக பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர். பின்னர் அண்ணாமலை இருக்கும்வரை கூட்டணி கிடையாது என்று எடப்பாடி அறிவிக்கிறார். பதிலுக்கு அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை அறிவிக்கிறார்.

பின்னர் மேலிடம் கூப்பிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் மோசமான முதல்வர். 1991-96ம் ஆண்டுதான் லஞ்ச ஊழல் ஆட்சி நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டணி கிடையாது என்றனர். பின்னர் அமித்ஷா டெல்லிக்கு கூப்பிட்டவுடன் உடனடியாக விரைந்து சென்று கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்து விடுகின்றனர். இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடக்கும் மோதல் போல இல்லாமல், ஒரு கட்சியில் இரு கோஷ்டிக்கிடையே நடக்கும் சண்டையை மேலிடம் பஞ்சாயத்து செய்வதுபோல எடப்பாடி மற்றும் அண்ணாமலை அணியை மேலிடம் பார்க்கத் தொடங்கிவிட்டது.

இப்போதும் அப்படித்தான் இரு அணியினரும் மோதிக் கொள்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள ஜெயக்குமார், தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று மறைமுகமாக கூறிவிட்டனர். இது குறித்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியும் பாஜக மாநில அமைப்புச் செயலாளருமான கேசவவிநாயகம், அண்ணாமலையை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது நான் வேண்டுமானாலும் ராஜினாமா செய்து விடுகிறேன். நீங்கள் அதிமுகவுக்கு தகுந்தவரை மாநில தலைவராக போட்டு தேர்தலை சந்தியுங்கள் என்ற கூறியுள்ளார்.

இதையே ஒரு கடிதமாக தயாரித்து பாஜக மேலிடத்துக்கு அனுப்பி விட்டார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா ஆகியோரை தொடர்பு கொண்ட பாஜக மேலிடம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு தமிழக கூட்டணி பிரச்னை குறித்து அமித்ஷா பேசுவார். அதுவரை அதிமுகவினரும், பாஜக தலைவர்களும் அமைதியாக இருக்க வேண்டும். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் அண்ணாமலை கோரிக்கை ஏற்கப்பட்டு அதிமுகவை கூட்டணியில் இருந்து மேலிடம் கழட்டி விடுமா? அல்லது அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து கழட்டி விடுவார்களா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்கின்றனர் பாஜக டெல்லி தலைவர்கள்.

The post அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து மாற்றிவிடுங்கள்: பாஜக தலைமைக்கு அண்ணாமலை அறிக்கை; இரு தரப்பினரும் அமைதியாக இருக்க அமித்ஷா உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: