கந்தல் துணி விளக்கு!

சுவாமி சமர்த்த ராமதாசர்! இவர், மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் குரு ஆவார்!

என்னதான் இருந்தாலும் ராமதாசர், தம் துறவு நிலைக்கு ஏற்ப, அன்றாடம் ஒருசில வீடுகளில் பிட்சை எடுத்து, அதன் மூலம் கிடைத்ததைக் கொண்டு, ஆனந்தமாக வாழ்ந்தார். ஒருநாள், வழக்கப்படி ராமதாசர் பிட்சைக்குப் போனார். அன்று அவர், ஒரு வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்ட போது, அந்த வீட்டுப் பெண்மணி பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்து, அதில் ஒரு கந்தைத்துணியை நனைத்து, அந்தத் துணியால் தரையை மெழுகிக் கொண்டிருந்தாள். வாசலில் நின்று ராமதாசர், “பவதி பிட்சாந்தேஹி!” என்று குரல் கொடுத்ததும், அந்தப் பெண்மணிக்குக் கோபம் தாங்கவில்லை. தரை மெழுகிக் கொண்டிருந்த கந்தல் துணியை அப்படியே தூக்கி, ராமதாசர் மீது வீசி, ஏசி விரட்டினாள்.

ராமதாசர், கொஞ்சம்கூடக் கோபப்படவில்லை. தன் மீது வீசப்பட்ட அழுக்குக் கந்தல் துணியுடன், அமைதியாக ஆசிரமம் திரும்பினார். திரும்பியதும், அந்தக் கந்தல் துணியை நன்கு கசக்கித் தூய்மைசெய்தார். அதில் இருந்த நூல் இழைகளையெல்லாம் தனித்தனியாக எடுத்து, அவற்றையெல்லாம் திரியாகத் திரித்தார். அந்தத் திரியைக் கொண்டுபோய், ஆலயத்தில் சுவாமியின் முன்னால் விளக்கேற்றி, ‘‘தெய்வமே! என் மீது கந்தல் துணியை வீசிய அந்தப் பெண்மணிக்கு அமைதியைக் கொடு! அவள் பாவம் நீங்க வேண்டும்!’’ என வேண்டினார் ராமதாசர். பொறுமையின் சிகரம் ராமதாசர். அது மட்டுமல்ல! இந்த நிகழ்வின் மூலம், அந்தப் பொறுமையைப் பாடமாக நடத்துகிறார் நமக்கு.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post கந்தல் துணி விளக்கு! appeared first on Dinakaran.

Related Stories: