மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது: எம்எல்ஏ மாங்குடி பேச்சு

காரைக்குடி, செப். 21: காரைக்குடி அருகே கண்டனூர் பேரூராட்சி ரயில்வே கேட் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் வழங்கும் திட்டத்தை மக்களுக்கு அர்பணிக்கும் விழா நடந்தது. செயல் அலுவலர் ஈஸ்வரி வரவேற்றார். திமுக பேரூர் செயலாளர், பேரூராட்சி உறுப்பினர் பிரமையா, காங்கிரஸ் நகர தலைவர், பேரூராட்சி உறுப்பினர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டத்தை துவக்கிவைத்து எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் கிராமப்புற மக்களின் வளர்ச்சியை மையமாக கொண்டதாக உள்ளது.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இங்கு மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்கள் தொகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர ஒவ்வொரு கிராமமாக நேரடியாக சென்று மக்களின் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்துவருகிறோம். பலஆண்டுகளாக பேருந்து வசதியில்லாத பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர மினி ஸ்டேடியம், டைடல் பார்க், சட்டக்கல்லூரி போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நமது தொகுதிக்கு வழங்கியுள்ளார்’’ என்றார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் கொத்தமங்கலம் பிஎல்.காந்தி, பேரூராட்சி உறுப்பினர்கள் வசந்தா நடேசன், ரவிக்குமார், முருகப்பன், சுமதி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் நெல்லியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது: எம்எல்ஏ மாங்குடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: