ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பாஸ்ட்புட் உணவகங்களில் திடீர் சோதனை:  10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

திருவள்ளூர், செப். 21: நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பாஸ்ட்புட் உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். தமிழ்நாட்டில் கடந்த வருடம் பல்வேறு இடங்களில் ஷவர்மா எனப்படும் அசைவ உணவை சாப்பிட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து பாஸ்ட்புட் உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தநிலையில் மீண்டும் ஷவர்மா பிரச்னை தமிழ்நாட்டில் தலை தூக்கியுள்ளது. நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்தார். மேலும் 30க்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பாஸ்ட்புட் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.என்.சாலை, சி.வி. நாயுடு சாலை உள்பட ‘ஷவர்மா’ விற்பனை செய்யப்படும் கடைகளில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள், ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெ.என்.சாலையில் உள்ள ஒரு கடைக்கு நகராட்சியின் அனுமதி பெறவில்லை என சீல் வைத்தனர். மேலும் 3 கடைக்கு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ₹7 ஆயிரம் அபராதம் விதித்தார். அந்த கடையில் உள்ள இறைச்சியினை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் சோதனை செய்தபோது, அதில் அளவுக்கு மீறி கலர் சேர்த்தும், ஏற்கனவே வேக வைக்கப்பட்ட இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்தும் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் 3 கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ அளித்தும் ₹4 ஆயிரம் அபராதம் விதித்தும் எச்சரிக்கை விடுத்தார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 30க்கும் மேற்பட்ட ஷவர்மா, சிக்கன் கிரில் விற்பனை செய்யும் அசைவ உணவகங்களில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வேலவன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த பிரீசர், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் ரொட்டி உள்ளிட்ட பொருட்களை அவர்கள் ஆய்வு செய்தனர். இதில் கலர்பொடி கலந்தும், தரமில்லாத கெட்டுப் போன நிலையிலும் இருந்த, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஷவர்மா கறிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவைகளை குப்பையில் கொட்டி அழித்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் 10 கடைகளுக்கு ₹2,000 அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பூந்தமல்லியில் ஒரு கடையை இழுத்து மூடினர். அதிகாரிகள் கடைகடையாகச் சென்று ஆய்வு நடத்தியதால் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை தொடரும்
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அசைவ உணவகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஷவர்மா, கிரில் சிக்கன், மசாலா தடவிய இறைச்சி உணவுகள் போன்றவற்றை பரிசோதனை செய்து வருகிறோம். பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்ததில் 20 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 10 கடைகளுக்கு ₹2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான, தரமான, சுகாதாரமான உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகிறோம். இதனை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். உரிமம் இல்லாமல் செயல்படும் கடைகள் உரிமம் பெற அறிவுறுத்தி உள்ளோம். மேலும் பாதுகாப்பான உணவு பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு உறுதி செய்யும் வகையில் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பாஸ்ட்புட் உணவகங்களில் திடீர் சோதனை:  10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: