சாயா நாடி 3

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

கோட்சாரத்தின்படி, கிரகங்கள் மீது சாயா கிரகங்கள் நாடி செல்லும் போதோ அல்லது சாயா கிரகங்கள் மீது மற்ற கிரகங்கள் நாடி செல்லும் போது மாறுபட்ட பலன்கள் ஏற்படுகின்றது. பாரம்பரிய ஜோதிடத்தில் திசா புத்திகளின் அடிப்படையில் பலன்கள் இருக்கும். பாரம்பரியத்தின் ஜோதிடத்தையும் நாடி ஜோதிடத்தையும் இணைத்து பலன்கள் காணும் போது பலன்கள் சிறப்பானதாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

பொதுவாக, ராகு திசா காலங்களில் ஜாதகர் மிகவும் ஒல்லியாக காணப்படுவார். அதற்கு பின்பு வரும் திசாவே அதை உணர்த்தும். பிறகு வரும் குரு திசாவில் ஜாதகர் சற்று தொப்பையோடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ராகு திசா மனதில் எப்பொழுதும் பிரமாண்டத்தை பார்த்து மயக்கச் செய்யும் மனநிலையை ஏற்படுத்தும். ராகு கொடுத்து கெடுப்பதில் வல்லவன் என்றே ஜோதிடம் சொல்கிறது. அவ்வாறு அளவற்ற தன்மையை ராகு செய்து கொண்டே இருக்கும்.

கிரகங்களின் மீது ராகு பயணிக்கும் பலன்கள்: சூரியன் மீது ராகு பயணிக்கும் காலத்தில் மனதில் பயம் உண்டாகும். அக்காலத்தில் உள்ள பாவத்திற்கு ஏற்றவாறு அந்த பயம் உண்டாகும். தந்தையின் உடல் பாதிக்கப்படலாம். அரசு சார்ந்த விஷயங்களில் இடர்பாடுகள் உண்டாகும். சந்திரன் மீது ராகு பயணிக்கும் காலத்தில் தாய்க்கு உடல் நலக் குறைவு உண்டாகும். உணவில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல, சிலருக்கு மயக்க நிலை உண்டாகும். மனக்கலக்கம் உண்டாகும்.

இனம்புரியாத அச்சம் ஏற்படலாம். நம் மீது ஏதேனும் மாயா மந்திரங்கள் செய்கிறார்களோ என்ற அச்சம் உண்டாகும். செவ்வாய் மீது ராகு பயணிக்கும் காலத்தில் வாகன விபத்து, வெட்டுக் காயம், அறுவை சிகிச்சை, ரத்தம் தொடர்பான வியாதிகள் உண்டாகும். சகோதரனுக்கோ அல்லது கணவனுக்கோ உடல்நலக்குறைவு ஏற்படலாம்.

புதன் மீது ராகு பயணிக்கும் காலத்தில் தோல் தொடர்பான வியாதிகள் ஏற்படக்கூடும், மனக்குழப்பம் ஏற்படலாம். குருவின் மீது ராகு பயணிக்கும் காலத்தில் தங்க ஆபரணங்கள் தொலைந்து போகும் அல்லது களவாடப்படும் வாய்ப்புகள் அதிகம். விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இக்காலத்தில் ஆன்மிக நாட்டம் குறைவாகும். கரும்புள்ளிகள் ஏற்படலாம்.

சுக்ரன் மீது ராகு பயணிக்கும் காலத்தில் மனைவி மற்றும் சகோதரிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். ஆடம்பர பொருட்களின் மீது அதிக நாட்டம் உண்டாகும். புதியதாக வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். நேர்மையற்ற வழியில் பொருட்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு ராகு திசாவோ அல்லது சுக்ரதிசா நடைபெறும் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், பெண்கள் தொடர்பான விஷயத்தில் ஜாதகருக்கு அவமானம் ஏற்படக்கூடும்.
சனி மீது ராகு பயணிக்கும் காலத்தில் உறவினர்கள் வழியில் கெட்ட செய்திகள் வர வாய்ப்புகள் அதிகம். மேலும், உடலில் சோம்பேறித்தனம், அசதி உண்டாகும். கெட்ட சகவாசம் ஏற்படலாம். சனி மற்றும் ராகு இருக்கும் பாவத்தில் முக்கியமாக அசுப பலன்களே அதிகமாக இருக்கும். இந்த இருகிரகங்களும் இணையும் பாவத்தில் உள்ள பலன்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

சாயா கிரகங்களில் ராகுவால் உண்டாகும் தோஷத்திற்கான பரிகாரங்கள் என்ன? பொதுவாக எந்த கிரகத்துடன் ராகு என்ற சாயா கிரகம் இணைந்துள்ளதோ அந்த கிரகத்தின் நாளில் உள்ள ராகு காலத்தில் அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையுடன் கூடிய ராகு ஸ்தலத்தில் சர்ப்ப பரிகாரம் செய்து கொள்வதனால் அந்த கிரகத்தினால் ஏற்படக்கூடிய தீயப் பலன்கள் குறைவாகும்.

சூரியனுடன் ராகு இணைந்திருந்தால், திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தி ஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு. கோதுமையால் செய்யப்பட்ட பதார்த்தங்களை நைவேத்தியம் படைத்து, அங்கேயே தானம் செய்துவிடுவது சிறப்பானதாகும். சந்திரனுடன் ராகு இணைந்திருந்தால் நாகங்களை தலையில் வைத்திருக்கும் அம்மன் உள்ள ஸ்தலத்தில் திங்கட்கிழமை அன்று ராகு காலத்தில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு. அம்பாளுக்கு பாலில் அபிஷேகம் செய்து வழிபடுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

செவ்வாயுடன் ராகு இணைந்திருந்தால் கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியாவில் இருக்கும் குக்கே நாக சுப்ரமணியரை செவ்வாய் கிழமை ராகு காலத்தில், நாகத்திற்கும் சுப்ரமணியருக்கும் தனித்தனியாக அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பான பலன்களை தரும். துவரையில் செய்யப்பட்ட நைவேத்தியம் படைத்து அங்கே தானம் செய்துவிடுவது சிறப்பானதாகும்.

புதனுடன் ராகு இணைந்திருந்தால், கும்பகோணம் அருகில் ஊத்துக்காடு என்னும் ஊரில் காளிங்க நர்த்தனர் திருக்கோயிலில் புதன்கிழமை, ராகு காலத்தில் சர்ப்ப தோஷ பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு. பச்சை பயரால் செய்யப்பட்ட நைவேத்தியத்தை படைத்து அங்கே தானம் செய்துவிடுவது சிறப்பானதாகும். குருவுடன் ராகு இணைந்திருந்தால் காளஹஸ்தி திருத்தலத்தில் வியாழக் கிழமை ராகு காலத்தில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொள்வது சிறப்பானதாகும். கொண்டைக் கடலையால் நைவேத்தியத்தை படைத்து அங்கே தானம் செய்துவிடுவது சிறப்பானதாகும்.

சுக்ரனுடன் ராகு இணைந்திருந்தால் திருவேற்காடு கருமாரியம்மனை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்து அர்ச்சனை அபிஷேகம் செய்து கொள்வது தீயப் பலன்களை குறைக்கும். மொச்சை பயரால் செய்யப்பட்ட நைவேத்தியத்தை படைத்து அங்கே தானம் செய்துவிடுவது சிறப்பானதாகும்.
சனியுடன் ராகு இணைந்திருந்தால் சிவன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபடுதல் சிறப்பான பலன்களை தரும். குறிப்பாக, சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி இன்னும் சிறப்பானதாகும். எள்ளால் செய்யப்பட்ட பதார்த்தங்களை நைவேத்தியம் செய்து அங்கே தானம் செய்துவிடுவது சிறப்பானதாகும்.

பொதுவாகவே, ராகு என்பது முன்னோர்களையும் வயதானவர்களையும் குறிக்கும். எனவே, கோயில்களில் வயதான முதியவர்களுக்கு அன்னதானம் செய்து அவர்களிடம் ஆசிபெறுவது சிறப்பானதாகும்.

சாயா கிரக நாடி தொடரும்…

The post சாயா நாடி 3 appeared first on Dinakaran.

Related Stories: