சென்னை: 1969-ல் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்து, இதன் முத்தாய்ப்பாக 1971-ல் சிப்காட் நிறுவனத்தை உருவாக்கினார்.
அதன் தொடர்ச்சியாக 1973-ல் இராணிப்பேட்டை, 1974-ல் ஓசூர், 1989-ல் கடலூர், 1997-ல் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம், 1998-ல் இருங்காட்டுக்கோட்டை மற்றும் சிறுசேரி. 2007-ல் செய்யாறு விரிவாக்கம். 2008-ல் பிள்ளைப்பாக்கம் மற்றும் தேர்வாய்க்கண்டிகை, 2010-ல் திண்டிவனம் என்று முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த சிப்காட்டின் சகாப்தம் இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்து, 16 மாவட்டங்களில், 28 தொழில் வளாகங்கள், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என 38,538 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் இட்ட சிப்காட் எனும் இந்த சிறுவிதை இன்று 3,142 தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை வென்று சுமார் ரூபாய் 1.62 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை ஈர்த்து சுமார் 7.5 இலட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்கி ஆலமரமாக வளர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
ஏற்றுமதியும், இறக்குமதியும் சரிவிகிதத்தில் நிகழும் பொருளாதாரமே நாட்டின் வளர்ச்சிக்கான பாதை என்பதை கணித்து உலகின் முன்னனி நிறுவனங்களான ஹுண்டாய், கேட்டர் பில்லர், செயிண்ட் கோபைன் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கமளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்பிக், அசோக் லேலாண்ட், டைட்டான் போன்ற இந்திய நிறுவனங்கள் உலகளாவிய அளவில் ஏற்றுமதி செய்ய அதற்கான உற்பத்தி வசதி வாய்ப்புகளையும் சிப்காட் வளாகங்கள் மூலம் உருவாக்கினார்.
கலைஞரின் தொலைநோக்கு பார்வையினால் உருவாக்கப்பட்ட சிப்காட் வளாகங்கள் இன்று வாகனம், வாகன உதிரி பாகங்கள். கனரக வாகனம் மற்றும் உபகரணங்கள். வேதிப்பொருட்கள், உணவுப்பொருட்கள் எரிபொருள் சார்ந்த பொருள்கள்,
உப பொருட்கள், மின்னனு தொழில் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கருவிகள், ஜவுளித்தொழில் மற்றும் ஆயத்த ஆடைகள், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரண கருவிகள். தோல் பொருட்கள் மற்றும் காலணிகள். வானூர்தி மற்றும் விண்வெளி உதிரி பாகங்கள் உற்பத்தி என ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இது தவிர, சர்வதேசத்தரத்துடன் கலைஞர் அவர்கள் உருவாக்கிய சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா இன்று பல அயல்நாட்டு நிறுவனங்களின் முதலீட்டுகளை ஈர்த்து, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
உயரிய இலக்குடன் சிப்காட் நிறுவனத்தை உருவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதற்குரிய உட்கட்டமைப்புகளான சாலைகள், நீராதார வசதிகள், சரக்கு வாகன நிறுத்தங்கள், தகவல் தொழில்நுட்ப இணைப்புகள், விமான நிலையம், இரயில் நிலையம், இலகுவான ஏற்றுமதிக்கு தமிழ்நாட்டின் சிப்காட் என கடல் சார்ந்த போக்குவரத்து இணைப்புகள் என நிறுவனங்கள் எளிதில் உலக வரைப்படங்களுடன் இணையும் வகையில் அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
கலைஞர் அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தமிழ்நாட்டின் முகங்களை சர்வதேச அரங்கில் தனித்துவமுடன் முன்னிறுத்தியுள்ளது. அவர்தம் வழியில் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞரின் இந்த தொழில் வீச்சை மேலும் மேலும் மெருகேற்றி நவீன தேவைக்கு ஏற்ப கட்டமைத்து வருகிறார்.
தொழில் முதலீட்டாளர்களுக்கு இலகுவான வாய்ப்புகளை வழங்குவதில் முன்னிலை
தொழில்வளாகங்கள் வரிசையில் அதிக நிலப்பரப்பு வாய்ப்புகள் கொண்டுள்ளதில் முன்னிலை
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்னிலை
உட்கட்டமைப்பு மற்றும் தொழில் சாலைகள் கட்டமைப்பில் முன்னிலை
எளிய மனிதர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு முன் நிற்பதில் முன்னிலை
அதிக நாடுகளில் இருந்து அபரீதமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முன்னிலை
என சிப்காட் தனது பயணத்தில் பல மைல்கற்களை உருவாக்கி வருகிறது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவுறுத்தலின்படி, நிறுவனங்களின் நாயகர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பங்கேற்ற விழாக்கள் மற்றும் தொழில்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய தொகுப்புகளின் புகைப்படங்களை கொண்ட புகைப்பட மாடத்தை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா. இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று திறந்து வைத்து, பார்வையிட்டார்கள். அதன் பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் தொழில் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திரு. வி. அருண்ராய், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் திருமதி எ. சுந்தரவல்லி இ.ஆ.ப., டிட்கோ மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., சிப்காட் செயல் இயக்குநர் திரு பி. ஆகாஷ் இ.ஆ.ப., டிட்கோ செயல் இயக்குநர் திரு. ஜெயசந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் சிப்காட் நிறுவன உயர் அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
The post நிறுவனங்களின் நாயகர் கலைஞர் புகைப்பட மாடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, டி.ஆர்.பி. ராஜா திறந்து வைத்தனர்..!! appeared first on Dinakaran.
