ரோகித், கோஹ்லிக்கு ஓய்வு அளித்தது ஏன்?: பரபரப்பு தகவல்

கொழும்பு : உலகக் கோப் பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் இறுதி கட்ட பயிற்சியாக ஆஸ்திரேலிய தொடர் இருக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த தொடரில் முக்கிய வீரர்களான கோஹ்லி, ரோகித், ஹர்திக், குல்தீப் ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பு சோதனை முயற்சியில் ஈடுபட போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனால் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். மேலும் சிலர் விராட் கோஹ்லி தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் சச்சினின் சாதனையை விரைவில் உடைத்து விடுவார் என்பதற்காக அவருக்கு தொடர்ந்து ஓய்வு வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது விராட் கோஹ்லி 47 சதங்கள் அடித்து இருக்கிறார். சச்சின் சாதனையை சமன் செய்ய அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதம் தான் தேவைப்படுகிறது. இதனால் தான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கோஹ்லிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக அவர்களுடைய ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற பலமான அணியை உலக கோப்பைக்கு முன் எதிர்கொண்டால் தான் அவர்களது பேட்டிங் திறமை அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வல்லுனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளை எதிர்கொள்வது சரியாக இருந்தாலும் வீரர்களுக்கு மனதளவில் ஓய்வு தேவைப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் ஒவ்வொரு அணியிலும் முக்கிய வீரர்கள் தற்போது காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகி வருவதால் அதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். ரோகித், கோஹ்லி ஆகியோர் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் என்பதால் அவர்கள் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது சரியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக 3வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இது சிறந்த முடிவு என்றும் பாராட்டியுள்ளனர்.

The post ரோகித், கோஹ்லிக்கு ஓய்வு அளித்தது ஏன்?: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: