காஞ்சிபுரம் அருகே வாகன சோதனை; நாட்டு வெடிகுண்டு, கஞ்சா, 2 கத்தியுடன் பைக்கில் வந்த இளம்பெண் உட்பட 3 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நடந்த வாகன சோதனையில் நாட்டு வெடிகுண்டு, கஞ்சா, 2 கத்தியுடன் பைக்கில் வந்த இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, 2 பட்டா கத்திகள், 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அடுத்த குண்டுகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் ஒரு பெண் உள்பட 2 பேர் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அந்த பைக்கை போலீசார் மடக்கினர். பைக்கில் வந்தவர்களிடம் விசாரிக்க முயன்றபோது, 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த பெண் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது அதற்குள் நாட்டு வெடிகுண்டு, 2 பட்டா கத்திகள், கஞ்சா இருந்தது.

தீவிர விசாரணையில் அந்த இளம்பெண் உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசி (22) என்பதும் சில மாதங்களாக காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் தங்கி பாலியல் தொழில் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 2 இளைஞர்களில் ஒருவர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (25) என்பதும் பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், மற்றொருவர் வசந்த் (எ) நொய் வசந்த் (22) என்பதும், 5க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நாட்டு வெடிகுண்டு, பட்டாகத்திகள், கஞ்சா உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய‌ சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படுகிறதா அல்லது வேறு மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து இங்கு பயன்படுத்துகிறதா? எங்கு, எதற்காக கொண்டு செல்கிறார்கள் எனவும் விசாரிக்க 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் அருகே வாகன சோதனை; நாட்டு வெடிகுண்டு, கஞ்சா, 2 கத்தியுடன் பைக்கில் வந்த இளம்பெண் உட்பட 3 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: