ஒரே நாடு, ஒரே தேர்தல் ராம்நாத் கோவிந்த் குழு வரும் 23ம் தேதி ஆலோசனை

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் வரும் 23ம் தேதி நடக்கிறது. மக்களவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு திடீரென முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டப்பேரவைகள், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இது குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றையும் அரசு கடந்த 1ம் தேதி அமைத்துள்ளது.

இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சபா குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் குழுவின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். ஆனால், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பெயர் இடம்பெறாததால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினராக பொறுப்பு வகிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ராம்நாத் கோவிந்த் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்று தெரிகிறது. அறிக்கையை சமர்ப்பிக்க குழுவுக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் ராம்நாத் கோவிந்த் குழு வரும் 23ம் தேதி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: