சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும் திருமால் தலம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பாலக்காட்டில் சரஸ்வதி

கேரள மாநிலத்தில் சரஸ்வதிக்கென பாலக்காடு மாவட்டம் உருளப்பாடி எனும் இடத்திற்கு அருகே உள்ள மண்ணியப்பத்தூரில், ஒரு கோயில் மண்டபமாக எழுப்பப்பட்டுள்ளது. இதனை வாக்தேவி கோயில் என்கிறார்கள். நின்ற திருக்கோலத்தில் கையில் வீணையுடன் பஞ்சலோக திருமேனியாக தேவி காட்சி தருகிறாள். இத்தேவியை வழிபடும் பக்தர்கள், ஆய கலைகள் அறுபத்துநான்கிலும் சிறப்பாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் அனுபவம்.

மண்ணே பிரசாதம்

கோயமுத்தூர் புஞ்சைப் புளியம்பட்டியிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது, இருபாறை. இங்கிருந்து 5 கி.மீ. போனால், ஓதிமலையை அடையலாம். இங்கு முருகன் ஐந்து திருமுகங்கள், எட்டுக்கரங்களுடன் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். இத்தலத்தில் மண், வெண்மைநிறமாக உள்ளது. அதைப் பக்தர்களுக்கு பிரசாதமாக ஆலயத்தில் வழங்குகின்றனர்.

சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும் திருமால் தலம்

தேனி நகருக்கு அருகிலுள்ள சின்னமனூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது, சாலமலை. இதன் உச்சியில் குடிகொண்டிருக்கிறார் லட்சுமி – நாச்சியார் சகித சஞ்சீவி பெருமாள். வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்படும். பஞ்ச பாண்டவர்கள் தம் வனவாச காலத்தில் இந்த மலைக்கு வந்து தங்கினராம். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து தொட்டில் கட்டி, தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் வந்து விளக்கேற்றி பெருமாளை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் அனுபவம்.

கல்வி அருளும் கோட்டியப்பர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர்காடு என்ற சிற்றூரில் கோட்டியப்பர் கோயில் கொண்டிருக்கிறார். கி.பி.7-ஆம் நூற்றாண்டில் சடாவர்மன் என்ற பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. அகத்தியர் தென்திசை நோக்கி யாத்திரை செய்தபோது, இங்கு மணலால் லிங்கத்தை அமைத்து சிவனை வழிபட, அந்த இடமே கோயிலாகியிருக்கிறது. வியாக முனிவர் எழுதிய லிங்க புராணத்திலும் கோட்டியப்பர் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். கோட்டியப்பரை வழிபடுபவர்கள் மனஅமைதி பெற்று கல்வி அறிவு பெற்று சிறப்புற வாழலாம்.

தேங்காய்மாலை போட்டால் விசா கிடைக்கும்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டரைக் குளம் வடகரையில், செல்வ விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவரைப் புதன்கிழமை அன்று அறுகம்புல் மாலை சாத்தி வழிபட, கல்வியில் மேன்மை அடையலாம். வெள்ளிக்கிழமை அன்று 5,7,9,11 என்ற அளவில் அவரவர் வசதிப்படி தேங்காய்களை மாலையாகக் கோத்து அணிவித்து அர்ச்சனை செய்தால், ஒரு மாதத்திற்குள் வெளிநாட்டில் வேலை செய்ய விசா கிடைக்கிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. இந்த ஆலயத்தில் வெள்ளெருக்கு, வன்னி, அரசமரம் மூன்றும் காணப்படுகின்றன. வெள்ளெருக்குமாலையை இந்த விநாயகருக்கு அணிவித்து அர்ச்சனை செய்தால், நீண்டகால நோய்களும், கிரகப்பீடைகளும், வாஸ்து தோஷங்களும் நீங்கும்.

படிக்கணக்கில் அவல் தானம்

குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில், மார்கழி மாதம் முதல் புதன்கிழமையை குசேலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால், அன்று பக்தர்கள், இலை வைத்து அதில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றுடன் சந்நதிக்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம். அன்று, ஆலயத்தில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி

The post சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும் திருமால் தலம் appeared first on Dinakaran.

Related Stories: