அரக்கோணத்தில் பராமரிப்பு பணி 9 மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து: பயணிகள் கடும் அவதி

திருவள்ளூர், செப். 14: அரக்கோணத்தில் பராமரிப்பு பணி காரணமாக, 9 மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தையொட்டி சென்னை மார்க்கத்தில் பாயிண்ட் பராமரிப்பு பணிகள் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடந்தது. இதில், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் ஈடுபட்டனர். பராமரிப்பு பணிகள் நடந்த நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கும் செல்லும் 9 மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக, கடம்பத்தூரில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இதேபோல், பெங்களூருவில் இருந்து சென்னை வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவையில் இருந்து சென்னை வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன. பின்னர், இந்த 2 ரயில்களும் மீண்டும் காட்பாடியில் இருந்து கோவை மற்றும் மைசூருக்கு மதியம் புறப்பட்டு சென்றது. அதேபோல், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் காலை வழக்கம்போல் திருப்பதிக்கு சென்றது. இதையடுத்து, திருப்பதியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர், அரக்கோணத்தில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு இயக்கப்பட்டது.

மேலும், வேலூர் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து ரயில் அரக்கோணத்திற்கு வந்து, மீண்டும் வேலூர் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்று, 9 மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டதாலும், 3 எக்ஸ்பிரஸ் ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல முடியாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் மதியம் 1.30 மணியளவில் முடிந்தது. இதை தொடர்ந்து, அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வழக்கமான நேரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அரக்கோணத்தில் பராமரிப்பு பணி 9 மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: