அதன்படி, கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜெரி மேஷாக், அனகாபுத்தூர் வஉசி நகரை சேர்ந்த வங்கி புரோக்கரான இந்துமதி (34) என்பவரிடம் பணம் கொடுத்து, அதனை மியூச்சுவல் பண்டில் டெபாசிட் செய்து வந்தார். பணத்தினை காசோலை மற்றும் ஆன்லைன் மூலமாக டெபாசிட் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனிடையே, கொரோனா காலகட்டத்தில் இந்துமதியை தொடர்பு கொண்டபோது, அவர் வேலையை விட்டு நின்று விட்டதாகவும், தற்போது சொந்தமாக தனியார் வங்கிகளில் மியூச்சுவல் பண்ட் பிசினஸ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னிடம் பணம் கட்டினால் கூடுதல் வட்டி கிடைக்கும் எனவும், ஜெரி மேஷாக்கிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி ஜெரி மேஷாக் கடந்த வருடம் ஆகஸ்ட் முதல் சிறுகச் சிறுக பணத்தை ஆன்லைன் மூலமாகவும், காசோலையாகவும் ரூ.72 லட்சத்து 50 ஆயிரத்தை தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரின் கணக்கில் முதலீடு செய்துள்ளார். பணம் செலுத்தியபோது அதற்கான இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் ஜெரி மேஷாக்குக்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் இல்லாமல் தொடர்ந்து அவர் பணம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெரி மேஷாக் ஆன்லைன் மூலமாக மியூச்சுவல் பண்ட் அக்கவுண்ட் கணக்கை பார்த்தபோது அதில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. மீதி ரூ.44 லட்சம் கணக்கில் காட்டவில்லை. இதனையடுத்து அவர் இந்துமதியை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஜெரி மேஷாக், நேரடியாக தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது அவர் செலுத்திய வங்கி கணக்குகள் இந்துமதியின் வங்கி கணக்குகள் என்பதும், காசோலை மூலம் கட்டிய பணம் மட்டும் மியூச்சுவல் பண்டில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
ஆன்லைன் மூலம் பணத்தை கட்டுங்கள் என்று இந்துமதி கூறிய வங்கி கணக்குகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கு. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெரி மேஷாக் இதுகுறித்து கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேலிடம் புகார் அளித்தார். அதன்பேரில், பெரவள்ளூர் உதவி கமிஷனர் சிவக்குமார், பெரவள்ளூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் இந்துமதியை நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அவர் தனியார் வங்கிகளுடன் இணைந்து புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இதில் வாடிக்கையாளரை பிடித்து தருவதாகக் கூறி அவர்கள் தரும் காசோலைகளை வங்கியில் செலுத்தியுள்ளார். வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த விரும்பும்போது அவரது வங்கி கணக்கை கொடுத்து அது தனியார் வங்கியின் வங்கி கணக்கு எனக்கூறி நூதன முறையில் பணத்தை ஏமாற்றியுள்ளார். இதற்காக வங்கி பெயரில் போலியாக மெயில் ஐடியை தயார் செய்து பணம் பெற்றவுடன் அதிலிருந்து பணம் கட்டியவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உங்கள் பணம் வந்து விட்டது என்ற கன்பர்மேஷன் மெசேஜையும் அவர் அனுப்பி உள்ளார்.
இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குதான் பணம் செல்கிறது என நம்பி தொடர்ந்து பணத்தை கட்டி வந்துள்ளனர். இவ்வாறு ஜெரி மேஷாக்கிடம் இருந்து ரூ.44 லட்சத்தை அவர் ஏமாற்றியுள்ளார். அந்த பணத்தை தனது தோழியிடம் கொடுத்து அதிக லாபம் தரும் மியூச்சுவல் பண்டில் செலுத்தச் செய்துள்ளார். ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது தொலைபேசி எண் தனக்குத் தெரியாது எனவும் இந்துமதி தொடர்ந்து போலீசார் விசாரணையில் கூறியுள்ளார். இதையடுத்து, பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் இந்துமதி மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இதுபோன்று எத்தனை நபர்களை இந்துமதி ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மியூச்சுவல் பண்டில் பணம் செலுத்துவதாக ரூ.44 லட்சம் மோசடி செய்த பெண் கைது: சந்தேகம் வராமல் இருக்க போலி மெயில் அனுப்பியது அம்பலம் appeared first on Dinakaran.
