கோஹ்லி, ராகுல் இன்னிங்சை கட்டமைத்த விதம் அருமை: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்று தான் நாங்கள் யோசித்தோம். ஏனெனில் எங்களுடைய சில வீரர்களுக்கு மேட்ச் பிராக்டிஸ் தேவைப்பட்டது. இந்தப் போட்டி நடந்து முடிந்ததற்கு முக்கிய காரணம் மைதான ஊழியர்கள் தான். எங்கள் அணியின் செயல்பாடு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பேட்டிங்கை தொடங்கும் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்பதை உணர்ந்தோம். மேலும் மழை பெய்யும் போதெல்லாம் அதற்கு தகுந்தார் போல் எங்களது இன்னிங்சை நாங்கள் மாற்றிக்கொண்டோம்.

குறிப்பாக கோஹ்லி, ராகுல் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் அதிரடியை காட்டுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். பும்ரா நன்றாகத்தான் பந்து வீசி வருகிறார். அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்கிறார். 8 முதல் 10 மாதம் வரை அவர் கடின உழைப்பை மேற்கொண்டார். பும்ராக்கு தற்போது 27 வயது தான் ஆகிறது. இந்த நிலையில் அவர் பல போட்டிகளை காயத்தால் தவறவிடுவது என்பது சரி கிடையாது. இன்று அவர் பந்து வீசிய விதம் அவர் யார் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்தப் போட்டியில் எங்களுக்கு பல பாசிட்டீவான விஷயங்கள் நடந்திருக்கிறது. தொடக்க வீரர்கள் மற்றும் விராட் கோஹ்லி கேஎல் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடினார்கள். கோஹ்லியை பொருத்தவரை அவர் இந்த இன்னிங்ஸை கட்டமைத்த விதம் பிரமிக்க வைக்கிறது. மேலும் கே.எல். ராகுல் காயத்திலிருந்து திரும்பி ரன்களை சேர்த்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு தான் ராகுல் விளையாடுவதை அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் விளையாடியதைப் பார்த்தாலே அவரது மனநிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நமக்கு புரிந்துவிட்டது’’ என்றார்.

The post கோஹ்லி, ராகுல் இன்னிங்சை கட்டமைத்த விதம் அருமை: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: