ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக குமரியில் ₹56 லட்சம் மோசடி

*கணவன், மனைவி கைது

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள், வாலிபர்களிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனிபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (29). நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:ஐரேனிபுரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு தோழிகள் ஆனோம். அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும் தங்களுக்கு ரயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர்.

இதை நம்பி ரூ.20 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியது போல ரயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டனர். இந்த மோசடியில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து குற்றப்பிரிவு எஸ்.ஐ. சார்லெட் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா உள்பட 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோயல் தேவா, அபிஷா ஆகியோர் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு சென்று 2 பேரையும் கைது செய்து, நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.

அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிரவிதாவை போல் கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கி உள்ளனர்.

அந்த வகையில் 4 பேரிடம் மொத்தம் ரூ.56 லட்சம் வரை வாங்கி மோசடி செய்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். கைதாகி உள்ள ஜோயல் தேவா, பாலக்காட்டில் உள்ள ஒன்றிய அரசின் தொழில் நிறுவனம் ஒன்றில் வெல்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக குமரியில் ₹56 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: