புச்சிபாபு நினைவு கோப்பை: மத்திய பிரதேசம் சாம்பியன்

கோவை: புச்சிபாபு நினைவு கோப்பை கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. தென்னிந்திய கிரிக்கெட்டின் தந்தை என அழைக்கப்பட்ட மறைந்த புச்சிபாபு நினைவாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த புச்சிபாபு நினைவு கோப்பை தொடரில் 12 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளில் கோவை, சேலம், நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றன. கோவை,  ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த பைனலில் மத்திய பிரதேசம் – டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ம.பி அணி முதல் இன்னிங்சில் 370 ரன் குவித்தது. சுமித் குஷ்வா 114, ஆராம் 65 ரன் விளாசினர். டெல்லி தரப்பில் சித்தார்த், சோகின், சிவநாக் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

டெல்லி முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு சுருண்டது (சிவநாக் 83 ரன்). ம.பி சார்பில் ராம்வீர் 4, குல்வந்த் 3 விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சில் மத்திய பிரதேசம் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 341 ரன் இலக்குடன் களமிறங்கிய டெல்லி 2வது இன்னிங்சில் வெறும் 91 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மத்திய பிரதேசம் 250 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டெல்லி அணியின் சிவநாக் ஆட்ட நாயகன் விருதும், மத்திய பிரதேச அணியின் சுமித் குஷ்வா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post புச்சிபாபு நினைவு கோப்பை: மத்திய பிரதேசம் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: