சாலை விரிவாக்க பணிக்காக லவ்டேல் பகுதியில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம்

ஊட்டி : சாலை விரிவாக்க பணிக்காக ஊட்டி – மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதுதவிர ஊட்டியில் இருந்து கோத்தகிரி மார்க்கமாக சாலை உள்ளது.

இதனிடையே இச்சாலைகளில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்யும் நோக்கில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேட்டுபாளையத்தில் இருந்து பர்லியார் வழியாக ஊட்டி,கூடலூருக்கு பயணிப்போர் நெரிசலின்றி செல்ல வசதியாக குன்னூருக்கு 3 கிமீ.,க்கு முன்பாக காட்டேரி பகுதியில் இருந்து குந்தா சாலையில் சேலாஸ்,கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திபேட்டை, லவ்டேல் வழியாக ரூ.46 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மழைநீர் வழிந்தோட வசதியாக பல்வேறு இடங்களில் நிலத்தடி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு விரிவாக்க பணிகள் மேற்கொண்டு பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலாஸ், கெந்தளா இடையே சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இச்சாலையில் தார் ஊற்றி செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் காந்திபேட்டை முதல் லவ்டேல் காவல் நிலையம் வரை சுமார் 3 கிமீ., தூரத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட நிலத்தடி கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் பக்கவாட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதனிடையே இந்த வழியில் சாலையின் இருபுறமும் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன.

இவற்றை அகற்றினால் தான் சாலை விரிவாக்க பணிகள் செய்ய முடியும் என்பதால், அபாயகரமான நிலையில் உள்ள இந்தமரங்களை வெட்டி அகற்றும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. அந்நிய மரங்களை அகற்றினாலும், இச்சாலையில் சில இடங்களில் உள்ள விக்கி உள்ளிட்ட சோலை மரங்களை அகற்றக் கூடாது என இயற்கை நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சாலை விரிவாக்க பணிக்காக லவ்டேல் பகுதியில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: