யுஎஸ் ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்காவுடன் (25 வயது, 2வது ரேங்க்) மோதிய கோகோ காஃப் (19 வயது, 6வது ரேங்க்) 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி சபலெங்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 2 மணி, 6 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கோகோ வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்ட 10வது பதின்மவயது ( டீனேஜர்) வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. 1999ல் செரீனா வில்லியம்ஸ் 17 வயதில் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதற்குப் பிறகு சொந்த மண்ணில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பட்டம் வென்ற முதல் அமெரிக்க டீனேஜர் என்ற சாதனையும் கோகோ வசமானது.
டிரேசி ஆஸ்டின் (2 முறை), ஸ்டெபி கிராப், மோனிகா செலஸ் (2 முறை), மார்டினா ஹிங்கிஸ், ஸ்வெட்லனா கஸ்னட்சோவா, மரியா ஷரபோவா, பியான்கா ஆண்ட்ரீஸ்கு, எம்மா ரடுகானு ஆகியோரும் டீனேஜ் வீராங்கனைகளாக யுஎஸ் ஓபன் பட்டம் வென்றுள்ளனர். இந்த வரிசையில் கோகோவும் இணைந்துள்ளார். யுஎஸ் ஓபனுக்கு பிறகு வெளியாகும் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சபலெங்கா முதலிடத்துக்கு முன்னேறும் நிலையில், கோகோ காஃப் முதல் முறையாக 3வது இடத்தை பிடிக்கிறார்.

 

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: