ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக முற்றுகை ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர் பங்கேற்பு

அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, சுங்க கட்டண உயர்வு மற்றும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நேற்று அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும். விவசாய பொருட்கள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை கொண்டு செல்ல சுங்கச்சாவடியில் கட்டண சலுகை வழங்க வேண்டும். சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர். இனிவரும் காலங்களில் சுங்க கட்டணத்தை உயர்த்தக்கூடாது. புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க கூடாது. பாஜக கட்சியின் தேர்தல் வாக்குறுதிபடி, அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், பார்த்திபன், சம்பத், ரமேஷ், பேரூர் செயலாளர்கள் பாரதி, ஹரிஹரன், மதுராந்தகம் நகர செயலாளர் சாந்தகுமார், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் பிரேம், மாவட்ட துணை செயலாளர் சசிகுமார், நிர்வாகிகள் கன்னியப்பன், பிரபாகரன், ராமலிங்கம் உள்பட 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக முற்றுகை ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: