ஆனைமலை பகுதியில் குறுகலான சாலை விரிவாக்கம் எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், ஆழியார் மற்றும் டாப்சிலிப் சுற்றுலா வரும் பயணிகள் பலரும், ஆனைமலையின் இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். கடந்த 10ஆண்டுகளில் ஆனைமலை பகுதியில் மக்கள் தொகை அதிகமானது. இதனால் வாகன போக்குவரத்து அதிகமாகியுள்ளது. அதிலும், பொள்ளாச்சி மீன்கரை ரோடு அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

இதில், சுங்கம் பகுதியில் இருந்து சுப்பே கவுண்டன்புதூர் வரையிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு ரோடு சற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுபோல, ஆனைமலை நெல்லுக்குத்திபாறை பகுதியிலிருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலக பகுதி வரை சற்று குறுகலான ரோடு விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் குறிப்பிட்ட பகுதியில் அகலம் குறைவாக இருக்கும் ரோட்டை விரிவாக்கம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர்.

மேலும் சிலநேரம் அப்பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த வழியாக செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, ரோட்டின் ஒரு பகுதி மேடுபோல் இருப்பதால், அந்த வழியாக இருசக்கரத்தில் வேகமாக செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, விபத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க ஆனைமலை பகுதியில் உள்ள குறுகலான ரோட்டை விரிவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post ஆனைமலை பகுதியில் குறுகலான சாலை விரிவாக்கம் எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: