மேற்குவங்க இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் தொடரும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் தொடரும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். துப்குரி பாஜக எம்எல்ஏ மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. 2021ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் மனைவியை வேட்பாளராக பாஜக களமிறக்கியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. துப்குரி தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றார்.

துப்குரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 4,313 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நிர்மல் சந்திர ராய்( திரிணாமுல் காங்கிரஸ்) – 96,961 வாக்குகளும், தபசி ராய் (பாஜக) – 92,648 வாக்குகளும் ஈஸ்வர் சந்திர ராய் (மார்க்சிஸ்ட்)- 13,666 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக வசம் இருந்த துப்குரி தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸ் ஆதரவுடன் தேர்தல் களம் கண்டா வேட்பாளர் ஈஸ்வர் சந்திரராய் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து x தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி; மேற்கு வங்கம் துப்குரி தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. இடைத்தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த துப்குரி தொகுதி மக்களுக்கு நன்றி. வடக்கு வங்காளத்தில் உள்ள மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மேலும் எங்களது வளர்ச்சி, உள்ளடக்கிய தன்மை மற்றும் அதிகாரமளிக்கும் உத்தியை நம்புகிறார்கள். மேற்குவங்க இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

The post மேற்குவங்க இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் தொடரும்: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Related Stories: