குமார் நகர் மாநகராட்சி பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் துவக்கம்

*சப்-கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பூர் : திருப்பூர் குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தினை சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தூய்மையை கடைபிடிக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் துவக்க விழா நடந்தது.

மாட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா வரவேற்றார். மாநகர் நல அலுவலர் கௌரி கௌரி சரவணன் முன்னிலை வகித்தார். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்து, திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக, சப்-கலெக்டர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து சப்-கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிறைவில் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் காயத்ரி, தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,“அரசு பள்ளிகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் பள்ளிகளை தூய்மைப்படுத்துல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட 10 தலைப்புகளில், நிகழ்ச்சி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தினை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளி, ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பு குழு பரிந்துரையின்படி விருதுகள் வழங்கப்படும்’’ என்றனர்.

The post குமார் நகர் மாநகராட்சி பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: