தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.24 கோடி ஊக்க தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு ₹2.24 கோடிக்கான ஊக்க தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் எஸ்டிஏடி சார்பில் கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக ₹.2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு காசோலைகள் வழங்கினார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2022 மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில், ஆண்கள் தடகளப் போட்டியில் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 7 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ₹13.50 லட்சம், ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் வெள்ளி வென்ற 12 வீரர்களுக்கு ₹9 லட்சம், தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2021 -22ல் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் வென்ற 6 வீராங்கனைகளுக்கு ₹13 லட்சம் என பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது.

மேலும், 2023 செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற எம்.பிரனேஷ்க்கு ₹5 லட்சம், 2019 மகளிர் சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற ரஷித்தா ரவிக்கு ₹3 லட்சம் என மொத்தம் 134 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் ₹2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வரிடம்வாழ்த்து பெற்ற வெளிநாட்டு பயிற்சியாளர்கள்
தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றிட, தமிழ்நாடு அரசின் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் பெட்ராஸ் பெட்ரோசியன் (ரோமோனியா), ஹாக்கி பயிற்சியாளர் எரிக் வோனிக் (நெதர்லாந்து), டென்னிஸ் பயிற்சியாளர் சஞ்சய் சுந்தரம் (அமெரிக்கா) ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.24 கோடி ஊக்க தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: