மகளிர் உரிமை தொகை பெற பெண்கள் ஆர்வம் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க தீவிரம்

உடுமலை, ஆக.31: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார். வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத் திட்டமானது தமிழகத்தில் துவங்கப்பட உள்ளது. இதற்காக நியாய விலை கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த விண்ணப்பங்களில் பயனாளிகள் பெயர் குடும்ப அட்டை எண் ஆதார் எண் மின் இணைப்பு எண் மற்றும் வங்கிக் கணக்கு என் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய அலுவலர்களிடம் பெண்கள் ஆர்வத்துடன் ஒப்படைத்து இருந்தனர்.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இத்திட்டத்திற்காக விண்ணப்பங்கள் வழங்கி இருந்தனர்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் அதற்கான நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி பயனாளிகளுக்கு விலை நிலம் உள்ளதா? சொந்த வீடு உள்ளதா? கார் உள்ளிட்ட கனரக வாகனம் உள்ளதா? வருமான வரி செலுத்துபவரா? என பல்வேறு கேள்விகளுக்கு உரிய விடை காண பயனளிகளின் வீடுகளுக்கே சென்று நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேலும் மகளிர் உரிமைத் தொகை காண விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட பின்னர் அதில் குறிப்பிட்டு இருந்த விண்ணப்பதாரரின் செல்போன் எங்களுக்கு தங்களது விண்ணப்பம் கிடைக்கப்பெற்றது என குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டது. தற்போது ஒவ்வொரு பயனாளிகளுக்கும் விண்ணப்பத்தின் பரிசீலனின் அடிப்படையில் உங்களது குடும்ப அட்டை என் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றும் உங்களது ஆதார் முகவரியில் நீங்கள் குடியிருக்க வில்லை என்றும் செல்போன் மூலம் தகவல்கள் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என செல்போன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு பெண்கள் வங்கிகளுக்கு சென்று தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த போதும் உடுமலையில் உள்ள வங்கிகளில் பெண்கள் அதிக அளவில் குவிந்து தங்களது ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைக்கும் படி விண்ணப்பங்களை வழங்கி வந்தனர்.

தேசிய மயமாக்கப்பட்ட பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பெண்கள் பலர் ஆதார் அட்டைகளின் நகல்களுடன் வங்கியில் குவிந்து தங்கள் கணக்குகளில் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்.
இன்னும் இரண்டு வார காலமே இருப்பதால் மகளிர் உரிமைத் துறை பெற வேண்டும் என்பதற்காக பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஆதார் முகவரி மாற்றம் மின்னிணைப்பு குளறுபடி, வீட்டு முகவரி் மாற்றம் உள்ளிட்டவற்றை விரைவாக செய்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தவர்களுக்கு செல்போன் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன என குறுந்த தகவல்களோடு டோல் ப்ரீ எண்ணில் இருந்து உங்கள் குடும்ப அட்டை எண் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வருவது பெண்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மகளிர் உரிமை தொகை பெற பெண்கள் ஆர்வம் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: