திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் அமைச்சர் ஆய்வு

திருவள்ளூர், ஆக. 31: திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளையும், திருவூர் ஊராட்சியில் தாட்கோ மூலம் ₹1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கான விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், சலுகைகள் உரிய முறையில் கிடைக்க பெறுவது குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை, மேல்மணம்பேடு பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு திருவூர் ஊராட்சியில் தாட்கோ சார்பாக ₹1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியையும், செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தேசிங்கு, பிரேம் ஆனந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நaல்ல அலுவலர் செல்வராணி, தாட்கோ செயற்பொறியாளர் அன்பு தேவகுமாரி, தனி வட்டாட்சியர் காந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பொன்னேரி: பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் உள்ள மாணவர் மற்றும் மாணவிகள் தங்கி படிக்கும் அரசு விடுதிகளுக்கு நேற்று மாலை தமிழ்நாடு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று மாணவ மாணவிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அங்கு உணவுகள் சரியாக கொடுக்கப்படுகிறதா என்றும், வருகைப் பதிவேடு சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். தொடர்ந்து சமையலறை, கழிப்பறைகளை நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.

அமைச்சருடன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் ரவி, பொன்னேரி தாசில்தார் மதிவாணன், திமுக ஒன்றியச் செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன், பொன்னேரி சுகுமாரன், நகர செயலாளர் ரவிக்குமார், ஆசானபுதூர் சம்பத், கதிரவன், தீபன், உமா காத்தவராயன், ஆதிதிராவிடர் அலுவலர் முத்துலட்சுமி, சிறப்பு வட்டாட்சியர் சித்ரா, தேசராணி தேசப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், துணைத்தலைவர் அலெக்சாண்டர், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: